தம்மம்பட்டியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் விற்பனை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளின் விற்பனை, தம்மம்பட்டியில் அமோகமாக நடைபெறுகிறது என, பொதுநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெளிமாநில லாட்டரிகள்.
வெளிமாநில லாட்டரிகள்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளின் விற்பனை, தம்மம்பட்டியில் அமோகமாக நடைபெறுகிறது என, பொதுநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில், முதல்வராக இருந்த அண்ணாவால், விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு, என்று, அரசின் சார்பில் லாட்டரி சீட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பரிசு முடிவுகள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தியதால், ஏழை, எளிய மக்களும், அரசும் அதில் பலன் அடைந்தனர். அதன்பிறகு, தனியாருக்கு லாட்டரி நடத்தும் உரிமையை வழங்கப்பட்டதால், அதில், பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்து, பொதுமக்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. 

அதையடுத்து, கடந்த 2001-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, தடை விதித்தார். ஆனால், தடை உத்தரவு என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் கேரள, பூட்டான், சிக்கிம் மாநில லாட்டரிகளும், ஒரு நெம்பர், மூன்று நெம்பர் என மூன்று வித லாட்டரிகள் கள்ளத்தனமாக விற்பனையாகிறது. கேரள லாட்டரிக்கு மாலை 4 மணி, பூட்டான் லாட்டரிக்கு காலை 10, மதியம் 12, பிற்பகல் 3, மாலை 5 மணி, சிக்கிம் லாட்டரி மதியம் 12 மணிக்கு என, அவற்றின் முடிவுகள் ஆன்லைனின் வெளியாகி, அவை உடனுக்குடன் வாட்சப் மூலம் பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதை தடுக்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், தம்மம்பட்டியில் கள்ள லாட்டரி விற்பனை செய்பவர்கள், தங்கள் வியாபாரத்தை திறம்பட செய்து வருகின்றனர். இதனால், கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த கூலித்தொழிலாளிகளை, மீண்டும் சுரண்டும் வகையில், தடை செய்யப்பட்ட லாட்டரிகளின் விற்பனை, தம்மம்பட்டியில் அமோகமாக உள்ளது என, சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com