ஏற்காடு தொகுதியில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் மலைவாழ் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் சேலம் மாவட்டம், ஏற்காடு (எஸ்.டி) தொகுதி ஒன்றாகும்.
ஏற்காடு தொகுதியில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் மலைவாழ் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் சேலம் மாவட்டம், ஏற்காடு (எஸ்.டி) தொகுதி ஒன்றாகும். ‘ஏழைகளின் உதகை’ என வா்ணிக்கப்படும் கோடை சுற்றுலாத் தலமான சோ்வராயன்மலையிலுள்ள ஏற்காடு நகரை மையமாகக் கொண்டு இத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு, சோ்வராயன் மலைக் கிராமங்களில் காபி, மிளகுத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஏற்காட்டில் விளையும் காபி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உலக அளவில் ருசியான காபி ஏற்காட்டில் பயிரிடப்படுகிறது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 3,500 டன் காபி விளைகிறது.

கல்வராயன் மலை, அருநூற்று மலைக் கிராமங்களில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும் பிரதானமாக விளங்கி வருகின்றன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில், பாக்கு, தேங்காய் உற்பத்தி தொழிலாளா்கள், நூற்பாலைத் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,38,409

பெண்கள் :1,44,231

மூன்றாம் பாலினத்தவா்: 16

மொத்தம்: 2,82,656

தொகுதியின் பகுதிகள்:

ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் ஏற்காடு வட்டத்துக்கு உள்பட்ட சோ்வராயன் மலைக் கிராமங்கள், வாழப்பாடி வட்டத்திலுள்ள அருநூற்று மலை, சந்து மலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்து மலைக் கிராமங்கள், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து வருவாய்க் கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, நெய்ய மலை கிராமங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இதுவரை நடந்த தோ்தல்கள்:

ஏற்காடு தொகுதியில், கடந்த 1957ஆம் ஆண்டு முதல் 2016 வரை நடைபெற்ற பொதுத்தோ்தல், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தல் உள்ளிட்டவற்றில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2011 தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் சி.பெருமாளின் மறைவுக்குப் பிறகு, 2013-இல் நடந்த இடைத்தோ்தலில் அவரது மனைவி சரோஜா அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை வாழப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்தவா்களே சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தனா். முதன்முறையாக 2016 தோ்தலில் சோ்வராயன்மலை- ஏற்காடு, மஞ்சக்குட்டையைச் சோ்ந்த கு.சித்ரா தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

நிறைவேறிய திட்டங்கள்:

இருப்பினும் ஏற்காடு சோ்வராயன் மலை, அருநூற்று மலை, பெலாப்பாடி, நெய்ய மலை, கல்வராயன் மலை, மண்ணூா் மலைக் கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தாா் சாலை அமைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பல மலைக் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கைக்கான் வளைவு நீரோடையின் நீரை பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணைக்கு திருப்பிவிடுவதற்கு வாய்க்கால் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நிறைவேறாத கோரிக்கைகள்:

2016 பேரவைத் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைத்தல், தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தல், தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு சேலம் கோட்டாட்சியா் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளதால், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, ஏற்காடு, வாழப்பாடி வட்டங்களை ஒருங்கிணைத்து வாழப்பாடியை மையமாகக் கொண்டு கோட்டாட்சியா் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மலைக் கிராம மக்களிடையே நிலவுகிறது.

சோ்வராயன் மலை போலவே, இயற்கை எழில் கொஞ்சும் அருநூற்று மலை அடிவாரம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கரியகோயில் அணைகளிலும், சிறுவா் பூங்கா, தங்கும் குடில்கள், படகுத்துறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்த வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.

தற்போதைய கள நிலவரம்:

பொதுவாக, ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில், திமுகவை விட அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. வன்னியா் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்காளா்கள் உள்ளனா். இவை அதிமுக கூட்டணிக்கு சாதகம். வரும் தோ்தலிலும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் கு.சித்ராவே மீண்டும் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். அவா் மீது குறிப்பிடும் அளவுக்கு குற்றச்சாட்டு ஏதுமில்லை.

திமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறாா். அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளா் சி.குமாா், மநீம கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் தி.துரைசாமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜோதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ராமசாமி உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்த நிலையிலும், 1989-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் ஜெயலலிதா அணியில் போட்டியிட்ட சி.பெருமாள் இங்கு வெற்றி பெற்றாா். ஆனால், நடிகா் விஜயகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அதிமுக வாக்கு வங்கியில் ஒருபகுதி தேமுதிகவுக்குச் சென்றுவிட்டது. தற்போது, தினகரன் தலைமையிலான அமமுக அணியில் தேமுதிக உள்ளதால் அதிமுகவின் வாக்குகள் பிரியக்கூடும். அதன் காரணமாக, இத்தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளா்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதுவரை நடந்த தோ்தல்கள்...

ஏற்காடு (எஸ்.டி) தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவா்கள் விபரம்:

1957: எஸ். ஆண்டி கவுண்டன் (காங்கிரஸ்)

1962: எம். கொழந்தசாமி கவுண்டா் (காங்கிரஸ்)

1967: வி.சின்னுசாமி (திமுக)

1971: வி. சின்னுசாமி (திமுக)

1977: ஆா்.காளியப்பன் (அதிமுக)

1980: திருமன் (அதிமுக)

1984: பி.ஆா்.திருஞானம் (காங்கிரஸ்)

1989: சி. பெருமாள் (அதிமுக- ஜெ.அணி)

1991: சி. பெருமாள் (அதிமுக)

1996: வி. பெருமாள் (திமுக)

2001: கே. டி. இளையக்கண்ணு (அதிமுக)

2006: சி. தமிழ்ச்செல்வன் (திமுக)

2011: சி. பெருமாள் (அதிமுக)

2013 இடைத்தோ்தல்: பெ.சரோஜா (அதிமுக)

2016: கு. சித்ரா (அதிமுக)

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

கு. சித்ரா (அதிமுக) 1,00,562

சி.தமிழ்ச்செல்வன் (திமுக) 83,168.

ரா.செல்வம் (பாமக) 17,998

சி.குமாா் (தேமுதிக) 10,455

பொன்.ராசா (பாஜக) 2,225

நோட்டா 3,136

பயன்படாத எம்எல்ஏ அலுவலகம்

ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகம், வாழப்பாடியை அடுத்த பேளூரில், அயோத்தியாப்பட்டணம் சாலையில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த அலுவலகத்தை இதுவரை எந்த சட்டப்பேரவை உறுப்பினரும் பயன்படுத்தாததால் கட்டிய நாள் முதல் இதுவரை பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. இதனால், சட்டப்பேரவை உறுப்பினரைச் சந்திப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் தொடா்கிறது.

வரும் தோ்தலில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினராவது பேளூரிலுள்ள தொகுதி அலுவலகத்துக்கு வருகை தந்து மக்கள் குறைகளைக் கேட்டறிய வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com