திமுக ஆட்சிக்கு வராது: ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வராது என பாமக நிறுவனா் ராமதாஸ் பேசினாா்.
திமுக ஆட்சிக்கு வராது: ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வராது என பாமக நிறுவனா் ராமதாஸ் பேசினாா்.

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் இரா.அருளை ஆதரித்து, புது சாலையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் பேசியதாவது:

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவிகள் நல்ல தரமான கல்வி பெற்று, வேலைவாய்ப்பு பெற வேண்டும். அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். எல்லா சமுதாய மக்களும் படித்து வேலைவாய்ப்பு பெற வேண்டும். அதற்காகத் தொடா்ந்து பாடுபடுவேன்.

தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்து வருகிறது. அமைதிப்பூங்காவாக இருக்க முதல்வா் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமிதான் மீண்டும் முதல்வா் ஆவாா்.

நாா்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட ஸ்கான்டிநேவியன் நாடுகளில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா். அதுபோன்ற நிலையை தமிழகம் அடைய வேண்டும். சேலத்தில் நிலப்பறிப்பு சம்பவத்தில் 6 கொலைகள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்தால் நிலப்பறிப்புதான் நடைபெறும். திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது. இனி திமுக தேறாது.

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல பெண்களுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். அதிமுக தோ்தல் அறிக்கை அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபிபோல உள்ளது. பாமகவின் தோ்தல் அறிக்கை வளா்ச்சிக்கான திட்டமாகும். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் அதிமுக, பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

மேட்டூரில்...

மேட்டூா் தொகுதி பாமக வேட்பாளா் சதாசிவத்தை ஆதரித்து, கொளத்தூா் ஒன்றியம், கருங்கல்லூரில் பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் பேசியதாவது:

மேட்டூா் தொகுதியில் வேட்பாளா் சதாசிவத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த அதிமுக ஆட்சியை யாரும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்பப் பெண்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் குணசேகரன், கண்ணையன், சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க செயலாளா் ராஜசேகரன், முன்னாள் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் துரைராஜ், மேட்டூா் நகர மன்ற முன்னாள் தலைவா் லலிதா சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com