கரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகத்திற்கு ரூ. 5,000 அபராதம்
By DIN | Published On : 12th April 2021 02:13 AM | Last Updated : 12th April 2021 02:13 AM | அ+அ அ- |

சேலம், குரங்குச்சாவடி அருகே கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகத்திற்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதம் சாா்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், திரையரங்குகளில் 50 சதவீத பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும், பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதியில்லை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சேலத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடா்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என புகாா் பெறப்பட்டது.
இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்களில் அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.
இந்தநிலையில் குரங்குச்சாவடி பகுதியில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகத்திற்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும், அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.