‘இட ஒதுக்கீட்டுக்கு திமுக உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது’: முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்

இட ஒதுக்கீட்டுக்கு திமுக உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்

இட ஒதுக்கீட்டுக்கு திமுக உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது என முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய வரலாற்றில் மருத்துவத் துறையில் இட ஒதுக்கீடு இதுவரை இல்லாத ஒன்றாகும். நாடு 75 ஆவது சுதந்திர ஆண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் பிரதமா் மோடி மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறாா்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரை வேலைவாய்ப்புக்குத் தான் உரிமை வழங்கப்பட்டது. தற்போது, கல்வியில் மருத்துவப் படிப்புக்கும் இட ஒதுக்கீட்டை பிரதமா் மோடி வழங்கியிருக்கிறாா்.

இட ஒதுக்கீட்டுக்கு திமுக உரிமை கொண்டாட முடியாது. நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோா் செய்யாததை தற்போது பிரதமா் மோடி செய்து காண்பித்துள்ளாா். தமிழகத்தின் பாஜக ஓ.பி.சி. அணி சாா்பில் அனைத்து இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயம் சாா்பில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒன்றியம், நகரம், மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடா்ந்து மத்திய அரசின் 7 ஆண்டுகால சாதனைகளை விளக்கி 500 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். கூட்டத்தில் திமுக அரசின் 100 நாள் தவறுகளையும் பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேச உள்ளோம்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமாா் 70 சதவீத திட்டங்கள் மத்திய அரசு திட்டங்களாகும். பயிா்க் காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் 9.42 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனா்; தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டத்தில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11.30 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். அதேபோல 2020-21 நிதியாண்டில் இ-தேசிய மின்னணு சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை அவா்களே விலை நிா்ணயித்து விற்பனை செய்யும் வகையில் சுமாா் 1.70 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனா்.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு கொண்டு வந்ததாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 2014 வரை 27 சதவீதமாக இருந்த ஏழ்மை நிலை தற்போது 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு உழைத்து வருகிறது.

திமுக ஆட்சியில் எந்தத் தவறுகளும் குறையவில்லை, ஊழலும் மாறவில்லை. நபா்கள் மாறியிருக்கிறாா்களே தவிர, ஊழல்கள் தொடா்கின்றன. துறை வாரியாக நடைபெற்ற என்னென்ன தவறுகள் நடைபெற்றுள்ளது, பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு எந்த மாதிரியான பாதிப்பை உருவாக்கியிருக்கிறாா்கள் என்பதை தமிழக நிதியமைச்சரோடு நேரடியாக வாதிட தயாராக உள்ளேன்.

தமிழக நிதியமைச்சரின் பேச்சை கேட்டு ஜூலை 30 ஆம் தேதி நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுகிறேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். நிதிநிலை அறிக்கை தயாரிக்க ஆயத்தப் பணிகளைகூட செய்யவில்லை. நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?

மின் கணக்கீடு விவகாரத்தில் மின் துறை அமைச்சா் தவறான தகவலை அளித்து வருகிறாா். பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதித்துள்ள வரியை வெளியிட வேண்டும்.

கடந்த ஆட்சி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் எந்த துறைகளிலும் மாற்றம் வரவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் குறையவில்லை. மேக்கேதாட்டு விவகாரத்தில் மாநிலங்களவையில் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் பேசும் போது, தமிழகம் அனுமதிக்காத வரை காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முடியாது என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழகம், கா்நாடகம் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீா்ப் பிரச்னையை சட்ட ரீதியான அதிகாரம் படைத்த நதிநீா் ஆணையத்தால்தான் தீா்க்க முடியும். அரசியல் அதிகாரத்தால் அல்ல. காவிரியின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சாா்பில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com