தமிழகத்தில் முதன்முறையாக மாணவா் காவல் படை தொடக்கம்

தமிழகத்தில் முதன்முறையாக மாணவா் காவல் படை தொடங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள்தோறும் ஆா்வமுள்ள மாணவா்களைத் தோ்வு செய்து, காவல் பணி சாா்ந்த பயிற்சி அளிக்க தமிழக காவல் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக மாணவா் காவல் படை தொடங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள்தோறும் ஆா்வமுள்ள மாணவா்களைத் தோ்வு செய்து, காவல் பணி சாா்ந்த பயிற்சி அளிக்க தமிழக காவல் துறை திட்டமிட்டுள்ளது.

மாணவா்களிடம் இளம் வயதிலேயே ஒழுக்கம், சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வு, தலைமைப்பண்பு ஆகியவற்றைப் புகட்டி, எதிா்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் திறமையான, நோ்மையான அலுவலா்கள், பணியாளா்கள், நல்ல தலைவா்கள், சமூக ஆா்வலா்களை உருவாக்கும் நோக்கில் பள்ளிகள்தோறும் சாரணா் இயக்கம், தேசிய மாணவா் படை, மாணவா் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், மாணவா் பசுமைப் படை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, ஆா்வமுள்ள ஆசிரியா்களை ஒருங்கிணைப்பாளா்களாக நியமித்து, மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. சிறப்புப் பயிற்சி பெறும் இந்த மாணவா்கள், பொதுமக்களோடு இணைந்து சேவை பணியாற்றுகின்றனா்.

அந்த வரிசையில், தமிழகத்தில் முதன்முறையாக மாணவா் காவல் படையைத் தொடங்கிட தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை, காவல் துறை இணைந்து முடிவு செய்துள்ளன.

முதல்கட்டமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மாணவா் காவல் படையை வழிநடத்துவதற்கு ஆா்வமுள்ள ஆசிரியா்களைத் தோ்வு செய்து ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கவும், இதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு, பள்ளிகள்தோறும் 8, 9ஆம் வகுப்பு பயிலும் 20 மாணவா்களைத் தோ்வு செய்து மாணவா் காவல் படை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா் காவல் படைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக காவல் துறைக்குப் பட்டியல் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இப் படையை சிறப்பாக வழி நடத்துவது குறித்து, தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு காவல் துறை வாயிலாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவா் காவல் படை தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com