வாழப்பாடி பகுதியில் தொடரும் கோயில் உண்டியல் கொள்ளை

வாழப்பாடி பகுதியில் கோவில் உண்டியலை குறிவைத்து, மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால், கிராமப்புற மக்கள் பீதி அடைந்துள்ளனர். 
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட காளியம்மன் கோவில்.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட காளியம்மன் கோவில்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கோயில் உண்டியலை குறிவைத்து, மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால், கிராமப்புற மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  புதன்கிழமை இரவு, மேட்டுப்பட்டியில் இரு அம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது, போலீஸார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில்,  மர்ம கும்பல் கடந்த மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் 27-ல், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்த மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது.

டிசம்பர் 3 வெள்ளிக்கிழமை இரவு ஏத்தாப்பூர் அருகே வீரகவுண்டனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை பணத்தோடு மர்ம கும்பல் தூக்கிச் சென்றது.
 இந்நிலையில், வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி கிராமத்திலுள்ள 2 மாரியம்மன் கோவில்களில் கடந்த டிசம்பர் 5ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மர்ம கும்பல்,  உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து அதில் இருந்த ஏறக்குறைய ரூ 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

வாழப்பாடி பகுதி கிராமங்களில், அம்மன் கோவில் உண்டியல்களை குறிவைத்து மர்ம கும்பல் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதால் இப்பகுதி மக்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்திருந்த நிலையில்,  புதன்கிழமை இரவு வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ 50,000 வரை, இருந்திருக்கலாம் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உண்டியல் கொள்ளை முயற்சி நடந்த மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்.
உண்டியல் கொள்ளை முயற்சி நடந்த மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்.

இதேபோன்று இதே கிராமத்தில் உள்ள பலபட்டறை மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் திருட முயற்சி செய்துள்ளது. ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் விட்டுச் சென்றனர்.
வாழப்பாடி பகுதி கிராமங்களில் இதுவரை 7 அம்மன் கோவில்களில் மர்ம கும்பல் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடரும் கோவில் உண்டியல் உடைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த, வாழப்பாடி உட்கோட்ட போலீஸார் இரவு நேர ரோந்து பணி அதிகரிக்க வேண்டும்.  மர்ம கும்பலை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட கோவில் உண்டியல் பணத்தை மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com