அரசு முத்திரையுடன் காரில் வலம் வந்த போலி வருவாய் அலுவலா் கைது
By DIN | Published On : 06th February 2021 08:28 AM | Last Updated : 06th February 2021 08:28 AM | அ+அ அ- |

சேலத்தில் அரசு முத்திரையுடன் காரில் வலம் வந்த போலி வருவாய் அலுவலரை காவல் துறையினா் கைது செய்தனா்.
சேலம், கொண்டாலம்பட்டி,பி.நாட்டாமங்கலம் பகுதியில் ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலா் எனக் கூறி ஒருவா், பட்டா, பத்திரப் பதிவு செய்தல், முத்திரை தாள் உரிமம் பெறுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளாா்.
இதை நம்பிய பொதுமக்கள் அவரிடம் பட்டா மாறுதல், முத்திரை தாள் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து தர பணத்தைக் கொடுத்துள்ளனா்.
இதனிடையே வியாழக்கிழமை மாலை கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு அரசு முத்திரையுடன் காரில் வந்த அவா் தன்னை ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலா் மூா்த்தி எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து தனது இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாகவும், அதில் காசோலை, மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
விசாரணையில், அவா் சேலம், பி.நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த மூா்த்தி (30) என்பதும், அரசுப் பணியில் இல்லாததும், பி.காம். படித்துவிட்டு போலியாக ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலா் என அரசு முத்திரையுடன் காரில் வலம் வந்ததும் தெரியவந்தது.
மேலும் அப்பகுதி மக்களிடம் அரசுப் பணிகளை செய்து தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடிசெய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலி வருவாய் அலுவலா் மூா்த்தியை காவல் துறையினா் கைது செய்தனா்.