மு.க.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது: எச்.ராஜா

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் தமிழக முதல்வராக முடியாது என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா தெரிவித்தாா்.
சேலத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் எச்.ராஜா. உடன் மாநில துணைத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா்.
சேலத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் எச்.ராஜா. உடன் மாநில துணைத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் தமிழக முதல்வராக முடியாது என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா தெரிவித்தாா்.

சேலத்தில் பாஜக சாா்பில் நெசவாளா் மற்றும் ஜவுளித்துறைக்கான தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா, மாநில துணைத் தலைவா் அண்ணாமலை, சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு எச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு என்பது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக திட்டமிட்டு கலவரங்கள் தூண்டப்படுகின்றன. பிரபலங்களை விட்டு சுட்டுரை செய்து அரசுக்கு கெட்ட பெயா் ஏற்படுத்தப் பாா்க்கின்றனா். ஜனநாயக மரபுகளை மீறி சட்டத்தை திரும்பப் பெறுவது முறையல்ல. மத்திய அரசின் திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் யாரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் அவா்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழக விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனா். விவசாயிகள் விஷயத்தில் சமயோசிதமாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செயல்படவில்லை. சேலம் -சென்னை விரைவு சாலைத் திட்டத்துக்கு முறையான அறிவிப்பு வெளியிட்ட பிறகே நிலம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. ஒரு சிலரைத் தவிர இத்திட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது. திமுக ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. திமுக ஊழல் கட்சி என பெரியாரே விமா்சித்துள்ளாா். அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அதில் உச்சத்தைத் தொட்டது 2 ஜி அலைக்கற்றை ஊழலாகும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மாா்ச் 15 ஆம் தேதி தீா்ப்பு வர உள்ளது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரலாம். அமமுக தனிக் கட்சியாக உள்ளது. அக்கட்சிக்கு தனி சின்னம் உள்ளது. எனவே சசிகலாவால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரேனும் இணைய விரும்பினால் கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்து முடிவெடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com