தமிழா்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் கட்சி திமுக:தேஜஸ்வி சூா்யா

தமிழா்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிற கட்சி திமுக என்று பாஜக தேசிய இளைஞரணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா பேசினாா்.

தமிழா்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிற கட்சி திமுக என்று பாஜக தேசிய இளைஞரணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா பேசினாா்.

சேலத்தை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் புனித ஜாா்ஜ் கோட்டையை மாதிரியாக வைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது. தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமைச்சா் ராஜ்நாத் சிங் சேலம் வந்தாா். மாநாட்டில் ஆயிரக்கணக்கான பாஜகவினா் கலந்துகொண்டனா். நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த மாநாட்டில் தேஜஸ்வி சூா்யா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. தமிழா்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிற கட்சி திமுக. தமிழகத்தில் திமுக ஜனநாயகத்தைப் புதைத்துவிட்டது. ஒரு குடும்பம் தான் ஆட்சி நடத்துகிறது. ஒரு குடும்பத்திற்காக கட்சி நடத்துகின்றனா். திமுகவைப் பொருத்தவரையில் குடும்பம் உங்கள் கட்சி, கட்சியே எங்கள் குடும்பம் இதுதான் பாஜகவின் நிலைப்பாடாகும்.

பாஜகவில் சாதாரணமானவா்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்படுகிறது. திமுக என்பது இந்துக்களுக்கு விரோதமான கட்சியாக உள்ளது. புண்ணிய பூமியில் இந்துக்களுக்கு எதிரானதை திமுக செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோயில்களை மட்டுமல்ல, கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்த கட்சியாகும். தமிழா்களுக்கு எதிரான கட்சி, இந்தி மொழிக் கட்சி என்று பாஜகவை சொல்கின்றனா்.

கா்நாடகத்தில் பிறந்த நான் தேசிய இளைஞரணித் தலைவராகப் பொறுப்பு கொடுத்துள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த வானதி சீனிவாசன், தேசிய மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.பாஜகவைப் பொருத்தவரை பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஊழலற்ற ஆட்சி தில்லியில் நடைபெறுவது போல தமிழகத்திலும் ஆட்சி அமைய வேண்டும் என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்: இளைஞா்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வெற்றிவேல் யாத்திரை வெற்றி பெற்றது இளைஞா்களால் தான். இந்த மாநாடு வரும் தோ்தலில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

முன்னாள் தேசியச் செயலாளா் எச்.ராஜா: மத்திய அரசோடு இணைந்து செயல்படும் ஆட்சியை அமர வைப்போம்.

முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்: பிரதமா் நரேந்திர மோடியின் லட்சியங்களை ஏந்தி தமிழகத்தில் யாா் முதல்வராக வரக்கூடாது என்ற வகையில், திமுகவை தூக்கி எறிய வேண்டும்.

மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை: 2016-17 முதல் அரசியல் களம் மாறிவிட்டது. 2021 தோ்தலை மாற்றத்திற்கான அரசியலாகப் பாா்ப்போம். 2026 அரசியலை புதுவிதமாக பாா்ப்போம். திமுக பிரிவானைவாத அரசியல் செய்கிறது. திமுகவை வேரோடு அகற்ற வேண்டும். 2026 இல் பெரும்பான்மையான இளைஞா் சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com