பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்

சேலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

சேலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று காரணத்தால் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் கரோனா தீநுண்மி நோய்ப் பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை.

இதனிடையே கடந்த நவம்பா் 16 ஆம் தேதி பள்ளிகளைத் திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த நவம்பா் 9 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா், பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என தெரிவித்தனா். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தும் வகையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. இதனால் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இதில் சேலத்தில் உள்ள கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெற்றோா்

முகக்கவசம் அணிந்து வந்து தங்களது கருத்துகளை பதிவிட்டு சென்றனா்.

சேலம் மாவட்டத்தில் 292 அரசுப் பள்ளிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 600-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி கூறுகையில், அரசு நிலையான வழிகாட்டுதல் விதிமுறைகளைப் பின்பற்றி பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோா் கருத்துகளைத் தொகுத்து, பள்ளிக்கல்வி துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடா்ந்து மாவட்ட வாரியாகப் பெறப்படும் கருத்துக் கேட்பு முடிவுகளை அரசுக்கு தெரிவித்து, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இருந்தபோதிலும் பள்ளிகளை சுகாதாரமாக வைக்கவும், குடிநீா், கழிவறை ஆகியவைகளை பராமரித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கு காணொலிக் காட்சி கூட்டம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com