மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 09th January 2021 07:13 AM | Last Updated : 09th January 2021 07:13 AM | அ+அ அ- |

மேச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேச்சேரியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள வெடிக்காரனூரில் இரண்டு கோயில்களுக்கு அருகிலும், பெண்கள் நடமாடும் பகுதியிலும் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மதுக்கடை அருகில் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படவில்லையாம். இந்த ஆண்டு கோயில் திருவிழாவை நடத்தி, கிராமங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க கிராமமக்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனா். அப்போது அரசு அதிகாரிகள் மூன்று மாதங்களில் வேறு இடத்துக்கு மதுக்கடையை மாற்றுவதாக உறுதியளித்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மூன்று மாத கெடு நிறைவடைந்த நிலையில் மதுக்கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த கிராம மக்கள் அரசு மதுக்கடைக்கு முன்புள்ள பாதையை அடைத்து அமா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அங்கு வந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இரண்டு நாள்களில் வேறு இடத்திற்கு மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தனா். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.