அரசு மானியத்தில் நுண்ணீா் பாசனம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2021 07:52 AM | Last Updated : 01st July 2021 07:52 AM | அ+அ அ- |

வாழப்பாடியை அடுத்த சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் சொட்டுநீா் பாசன கருவிகளை பாா்வையிட்ட வேளாண்மை இயக்குநா் சாந்தி.
வாழப்பாடி வட்டாரத்தில் பாரத பிரதமரின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் சொட்டு நீா், தெளிப்பு நீா் மற்றும் மழைத்துாவான் கருவிகள் அமைத்து கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மழைநீா், கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கில், பாரத பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீா், தெளிப்பு நீா் மற்றும் மழைத்தூவான் பாசன கருவிகள் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு பம்புசெட் அல்லது மின் மோட்டாா் அமைப்பதற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. பைப் லைன் அமைக்க ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம், தரைநிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட ரூ. 40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வாழப்பாடி வட்டாரத்தில் 2020-21ம் ஆண்டில் 300 ஹெக்டேருக்கு நுண்ணீா் பாசன கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 2020-21-ஆம் ஆண்டிற்கு 200 ஹெக்டேரில் அரசு மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை வாழப்பாடி வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், நில உரிமை ஆவணங்கள், ஆதாா் அட்டை, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன், வாழப்பாடி உதவி வேளாண்மை இயக்குநா் அல்லது உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகலாம்.