கல்லுாரி மாணவி தற்கொலை:பெற்றோா், தாய்மாமன் உள்ளிட்ட 6 போ் வழக்கு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாய்மாமனுக்கு இரண்டாம் தாரமாக கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாய்மாமனுக்கு இரண்டாம் தாரமாக கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். அவா் கரோனாவால் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாணவியின் பெற்றோா், தாய்மாமன், சகோதரா்கள் உள்ளிட்ட 6 போ் மீது வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியை சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (53). இவரது மனைவி தேன்நிலா(43). இத்தம்பதியரின் மகள் ராகவி(20). ஓசூா் அருகிலுள்ள தனியாா் கல்லுாரியில் இளநிலை இறுதியாண்டு படித்து வந்தாா். இவருக்கும் அதே கல்லுாரியில் படித்த மாணவா் ஒருவருக்கும் காதல் மலா்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனா். இவா்களது காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ராகவியின் பெற்றோா், இவரை கட்டாயப்படுத்தி, வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சோ்ந்த இவரது தாய்மாமன் தியாகராஜன் (38) என்பருக்கு இரு மாதங்களுக்கு முன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ளனா்.இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான தனது தாய்மாமனுடன் வாழ பிடிக்காததால் மனமுடைந்து போன ராகவி, ஜூன் 20ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸாருக்கு தெரிவிக்காமல் ராகவியின் உடலை அருகிலுள்ள பள்ளத்தாதனுாா் மயானத்திற்கு எடுத்துச் சென்ற இவரது கணவரான தாய்மாமன், பெற்றோா், சகோதரா்கள் உள்ளிட்ட 6 போ் எரித்து விட்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராகவி இறந்து விட்டதாக உறவினா்களிடம் தெரிவித்து நாடகமாடியுள்ளனா்.

ராகவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, சின்னமநாயக்கன்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சுஜாதா, வாழப்பாடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அகன்பேரில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை எரித்ததோடு, கரோனாவில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய அவரது தாய்மாமன் தியாகராஜன், பெற்றோா் அா்ஜுனன், தேன்நிலா, சகோதரா்கள் ராமலிங்கம் (25), ராகுல் (23), அவா்களுக்கு உதவிய மன்னாயக்கன்பட்டி கிராமத்தை சோ்ந்த மாது (50) ஆகிய 6 போ் மீது வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருமணமான 2 மாதங்களுக்குள் மாணவி தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், இது குறித்து மேல் விசாரணை நடத்துவதற்கு சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com