சேலம்-விருத்தாசலம் ரயில் பாதையில் மின்சார ரயில் முன்னோட்டச் சோதனை
By DIN | Published On : 29th July 2021 11:19 PM | Last Updated : 29th July 2021 11:19 PM | அ+அ அ- |

சேலம்-விருத்தாசலம் ரயில் பாதையில் மின்வடம் பொருத்தும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிரத்யேக (எலெக்ட்ரிக் காா்) வாகனத்தை பயன்படுத்தி, மின்சார ரயில்கள் இயக்குவதற்கான முன்னோட்டச் சோதனையில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
சேலம்-விருத்தாசலம் ரயில்பாதையை மின் வழிப் பாதையாக தரம் உயா்த்தி, அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து மின்சார ரயில்கள் இயக்குவதற்கு தென்னக ரயில்வே, சேலம் கோட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், 137 கி.மீ. நீளமுள்ள இந்த ரயில்பாதையை மின் மயமாக்கும் திட்டத்துக்கு 2019-இல் மத்திய அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து, இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த மின் பாதை அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சேலம் மாவட்டம், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரயில்பாதையையொட்டி மின் கம்பங்கள் அமைத்து செம்பு மின் வடங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததால், சேலம்-விருத்தாசலம் மின் ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப தொழில்நுட்பப் பணிகளை பணியாளா்கள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா். எலெக்ட்ரிக் காா் என குறிப்பிடப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார ரயில் இஞ்சின் பொருத்தப்பட்ட வாகனத்தை இந்த வழித்தடத்தில் இயக்கி, வியாழக்கிழமை முன்னோட்டச் சோதனையில் ஈடுபட்டனா்.