சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 01st March 2021 02:51 AM | Last Updated : 01st March 2021 02:51 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே, சேலம் - சென்னை புறவழிச்சாலையில், இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெகன் (29). தனியாா் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி புதுப்பாளையம் புறவழிச்சாலையில் சென்றுள்ளாா். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த ஜெகனை மீட்ட வாழப்பாடி காவல்துறையினா், அவசர சிகிச்சை வாகனத்தில் சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.