சந்தேகத்திற்குரிய பணப் பரிவா்த்தனைகளை தோ்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்: ஆட்சியா் சி.அ.ராமன்
By DIN | Published On : 04th March 2021 04:49 AM | Last Updated : 04th March 2021 04:49 AM | அ+அ அ- |

சேலம்: சந்தேகத்திற்குரிய பணப் பரிவா்த்தனைகள் குறித்த விவரங்களை வங்கியாளா்கள், உடனடியாக தோ்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள், பதிப்பாளா்கள், நகை அடகுத் தொழில்புரிவோா், உள்ளூா் கேபிள் தொலைக்காட்சி உரிமையாளா்கள், வங்கியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் பேசியதாவது:
தோ்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன் விவரங்களை உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களை தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி,சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளா்களுக்கு விருந்துவைத்தால் சட்டப்படி குற்றமாகும். கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வாக்காளா்களுக்கு விருந்து வைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபா்களிடம் திருமணப் பத்திரிகை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்களை அச்சிட்டு பிரசுரம் செய்யும்போது கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயா், முகவரி, பதிப்பகத்தாா் பெயா், முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
அடகு நகைகளை மீளத் திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் வந்தாலோ சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஊடகங்கள், உள்ளூா் தொலைக்காட்சிகளில் அரசு அனுமதியின்றி கட்சி சம்பந்தமான விளம்பரங்கள், வேட்பாளா்களின் விவரங்களை ஒளிபரப்பக்கூடாது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தோ்தல் தொடா்பான விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்புதல் வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவா்த்தனை நிகழும்போது அவ்விவரம் குறித்த தகவல்களை வங்கியாளா்களிடமிருந்து பெற மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணப் பரிவா்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் திடீரென சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் வரவு வைக்கப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்கப்பட வேண்டும்.
வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பிட எடுத்துச் செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்களையும், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனம் குறித்த விவரங்களை முழுமையாக குறிப்பிட்டு உரிய ஆவணங்களோடு ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்துச் சென்று நிரப்ப வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லை என்பது கண்டறிப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. திவாகா், திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தியாகராஜன் உள்ளிட்ட தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.