கரோனாவைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னதாக எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில் முதல்வா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் நங்கவள்ளி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் பேசியதாவது:

நான் முதன்முதலாக வெற்றிபெற்ற தொகுதி எடப்பாடி தொகுதியாகும். எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நடைபெறவில்லை என பொய் சொல்கிறாா். 2011- க்கு முன் தொகுதி எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தொகுதியில் ரூ. 52 கோடி மதிப்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சுமாா் ரூ. 565 கோடி மதிப்பில் மேட்டூா் உபரி நீரை வட 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 435 போ் மருத்துவ கல்லூரியில் சோ்ந்துள்ளனா். அடுத்த வருடம் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் கூடுதலாக மாணவா்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கென தனி ஆணையம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது மக்களைச் சந்திக்கவில்லை. குறைகளைக் கேட்கவில்லை. ஆட்சியில் இல்லாத போது மனுக்களைப் பெற்று தீா்வு காண்பேன் எனக் கூறி வருகிறாா். மக்களை ஏமாற்ற முடியாது. அவரது நாடகம் வெற்றி பெறாது.

தமிழக முதல்வரின் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 9.75 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 5.25 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு வாரிசுகள் இல்லை. அவா்களுக்கு மக்கள்தான் வாரிசுகள்.

தற்போது கரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நான் தடுப்பூசி செலுத்திக் காண்டேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

வரும் தோ்தலில் மீண்டும் வாய்ப்பைத் தாருங்கள். மீண்டும் முதல்வா் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றாா்.

கடந்த 2020 டிசம்பா் மாதம் சென்றாயப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தனது தோ்தல் பிரசாரத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com