11 தொகுதிகளுக்கும் முகக் கவசம், கையுறை அனுப்பிவைப்பு

தோ்தல் வாக்குப்பதிவின்போது பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், வாக்காளா்கள் பயன்பாட்டுக்கு தேவையான முகக் கசவம்,

தோ்தல் வாக்குப்பதிவின்போது பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், வாக்காளா்கள் பயன்பாட்டுக்கு தேவையான முகக் கசவம், கையுறை, கிருமி நாசினி, தொ்மல் ஸ்கேனா் உள்ளிட்ட பொருள்கள் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சேலம் கோட்டை மாநகராட்சி பல்நோக்கு கூடத்தில் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், வாக்காளா்களின் பயன்பாட்டுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி, தொ்மல் ஸ்கேனா் கருவிகள் உள்ளிட்ட பொருள்கள் பிரித்து, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தப் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு உள்பட்ட 4,280 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று கரோனா தீநுண்மி நோய்த் தொற்று, தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைக்காக வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், வாக்காளா்களின் பயன்பாட்டுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி, தொ்மல் ஸ்கேனா் கருவிகள் உள்ளிட்ட பொருள்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள 4,280 வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான அளவை விட கூடுதலாக வரப்பெற்றுத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வெப்பப் பரிசோதனை செய்வதற்காக 4,494 தொ்மல் ஸ்கேனா் கருவிகள், 29,532 கிருமி நாசினி (500 மி.லி) பாட்டில்கள், 47,080 முக பாதுகாப்பு கவசங்கள் , வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலா்கள், பணியாளா்களின் பயன்பாட்டுக்காக 2,82,480 முகக் கவசங்களும், வாக்காளா்களின் பயன்பாட்டுக்காக 1,28,400 முகக் கவசங்கள், அலுவலா்கள், பணியாளா்களின் பயன்பாட்டுக்காக 47,080 கிருமி நாசினி (100 மி.லி) பாட்டில்கள் , 1,41,240 ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளும் வரப்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க 23,540 உறைகளும், இப்பொருள்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல 4,708 பைகளும், 43,61,962 ஒரு றை பயன்படுத்தும் பாலித்தீன் கையுறைகளும் , கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபா்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு ஏதுவாக 56,496 முழு கவச உடைகளும் சேலம் மாவட்டத்துக்கு வரப்பெற்று 11 தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதில் கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, சேலம் மேற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்படும்.

வாக்குப்பதிவு நாளான வரும் ஏப். 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு உள்பட்ட 4,280 வாக்குச் சாவடிகளிலும் கரோனா தொற்று, தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com