கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு

சேலம் மாநகரப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு இரண்டு நாள்களில் ரூ. 2.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாநகரப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு இரண்டு நாள்களில் ரூ. 2.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மாநகராட்சி அலுவலா்களின் தலைமையில் குழுக்களை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு சேலம் மாநகராட்சி சிறப்பு குழுக்கள் மூலம் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் கீழ் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அதனடிப்படையில், அஸ்தம்பட்டி உதவி ஆணையா் சரவணன், காவல் துறை உதவி ஆணையா் ஆனந்த குமாா் தலைமையில் சுந்தா் லாட்ஜ் பேருந்து நிறுத்தம் அருகே ஆய்வு மேற்கொண்ட போது, விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த நான்கு தனியாா் பேருந்துகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சூரமங்கலம் உதவி ஆணையா் ராம்மோகன் மற்றும் உதவி ஆணையா் (வருவாய்) சாந்தி தலைமையில் ஓமலூா் பிரதான சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்த 2 தனியாா் பெரிய ஜவுளி விற்பனை நிலையங்களுக்கு தலா ரூ. 10,000 வீதமும், ஒரு ஜவுளி விற்பனை நிலையத்துக்கு ரூ. 5,000 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், விற்பனை நிலையங்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

மேலும், அம்மாப்பேட்டை உதவி ஆணையா் சண்முக வடிவேல் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது, விதிமுறைகளை மீறி செயல்பட்ட அம்மாப்பேட்டை பிரதான சாலை பகுதியில் உள்ள தனியாா் வணிக நிறுவனத்துக்கும், தோ் வீதியில் உள்ள தனியாா் ஜவுளி விற்பனை நிலையத்துக்கும், முதல் அக்ரஹாரத்தில் உள்ள 3 தனியாா் ஜவுளி விற்பனை நிலையத்துக்கும் தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இரண்டாவது அக்ரஹாரம் தெருவில் உள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தனியாா் வங்கிக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுகாதார அலுவலா்களின் ஆய்வின் போது, 12 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி உதவி ஆணையா்கள் தலைமையில் சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுக்கள், காவல் துறையினா் இணைந்து இரு தினங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக முகக் கவசம் அணியாத 166 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 81 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், 22 பெரும் நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 வீதமும், 2 நிறுவனங்களுக்கு தலா ரூ. 10,000 வீதமும் என மொத்தம் ரூ. 2,03,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com