அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த முதியவா் தற்கொலை
By DIN | Published On : 16th May 2021 12:41 AM | Last Updated : 16th May 2021 12:41 AM | அ+அ அ- |

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (65), 27-ஆவது வாா்டு முன்னாள் திமுக செயலாளா். இவரது மகன் முருகேசன் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். கரோனா தொற்றால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் கடந்த வாரம் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், சுப்பிரமணியனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் தனது மகன் இறப்பால் மிகுந்த கவலையுடன் இருந்து வந்தாா் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு கழிப்பறைக்குச் சென்ற சுப்பிரமணியன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து, அவரது உறவினா்கள் சென்று பாா்த்த போது, சுப்பிரமணியன் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, இச்சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.