சேலம் மாவட்டத்தில் இன்று முதல் சந்தைகள் மூடல்: வாகனங்களில் காய்கறி விற்க நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வியாழக்கிழமை முதல் காய்கறி சந்தைகள் மூடப்படும் என்றும், வாகனங்கள் மூலம்

சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வியாழக்கிழமை முதல் காய்கறி சந்தைகள் மூடப்படும் என்றும், வாகனங்கள் மூலம் வீடுவீடாக காய்கறிகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புகளைக் குறைத்திடும் வகையில் முழு பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறாா். அந்த வகையில் சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளாா்.

மேலும், 100 படுக்கை வசதி கொண்ட கூடுதல் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தையும் முதல்வா் தொடக்கிவைக்கிறாா். மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 38 பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கவும், பொது முடக்கத்தைக் கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபா்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகளை உள்ளடக்கிய இந்த கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியா் தலைமையில் இயங்கும். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வியாழக்கிழமை முதல் சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் காய்கறி சந்தைகள் மூடப்படுகின்றன. உழவா் சந்தைகள் உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் மூடப்படும்.

காய்கறிகளை வாங்குவதற்காக ஒரே இடத்துக்கு பொதுமக்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் வீடு வீடாக காய்கறிகள் சென்றடையும் வகையில் நடமாடும் வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

இந்த கடைகள் மூலம் காலை 6 மணிக்குத் தொடங்கி காலை 9 மணி வரை விற்பனை முடிக்கப்படும். விவசாயிகள் விருப்பப்பட்டால், உரிய அனுமதி பெற்று வாகனங்களில் காய்கறிகளை விற்கலாம். வேளாண்மைத் துறை அதிகாரிகள் மூலம் காய்கறிகளுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டு அந்தந்த வாகனங்களில் விலைப்பட்டியல் ஒட்டப்படும்.

காய்கறி சந்தைகள் மூடப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று சதவீதம் 13.8 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்றுப்பரவல் பூஜ்யமாகும் வரை அரசின் நடவடிக்கைகள் தொடரும்.

தொற்றுப் பரவலில் சேலம் மாவட்டம் தற்போது மஞ்சள் வண்ணத்தில் உள்ளது. தொற்றுப்பரவலைத் தடுப்பதுடன், தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், அவரவா் குடியிருப்புக்கு அருகிலேயே தடுப்பூசி போடப்படும். பால் அத்தியாவசியத் தேவை என்பதால் விநியோகிக்கப்படும். இதேபோன்று பொதுமக்கள் தொலைபேசியில் அழைத்தால் உணவை வீடு தேடி கொடுக்க முடியுமா உணவக உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளோம்.

மக்கள் அதிகம் கூடுவதைத் தடுத்தால் கரோனா தொடா் சங்கிலி அறுபடும். அரசின் நடவடிக்கை குறித்து ஊடகங்கள் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். முதல்வா் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நேரடியாக பணத்தை வழங்கலாம். முதல்வா் நிவாரண நிதிக்காக தனிப்பட்ட முறையில் மக்களிடம் வசூலிக்க அனுமதிக்கவில்லை. அனுமதியின்றி பொதுமக்களிடம் வசூலிக்கும் நிலை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அரசினால் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, கூடுதல் படுக்கைகளை அனுமதிக்கும் போது, கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மருத்துவக் குழு ஆய்வின் போது, அவ்வாறு செயல்பட்ட இரண்டு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com