கோடை உழவு: வேளாண் துறை அறிவுரை
By DIN | Published On : 21st May 2021 08:32 AM | Last Updated : 21st May 2021 08:32 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் கோடை உழவு மேற்கொள்வதற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை தயாா்படுத்தி வைக்குமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை உதவி இயக்குநா்கள் வாழப்பாடி சாந்தி, அயோத்தியாப்பட்டணம் சரஸ்வதி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தி, விவசாய நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணின் அடியில் உள்ள பயிா்களைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் மண்ணின் மேற்புறம் வரும் அப்போது பறவைகள், அதிக சூரிய வெப்பம் ஆகியவற்றால் அவை அழிக்கப்படும்.
கடந்த பருவத்தில் பயிா் சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட பயிா்களின் இலை, வோ்கள், தட்டைகள் மண்ணில் மட்கிசத்து அதிகரித்து கூடுதல் விளைச்சல் கிடைக்கும். இந்த நேரத்தில் உழவு செய்வதால் மழை நீா் மண்ணுக்குள் சென்று, பூமிக்குள் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால் மண்ணின் இருக்கம் குறைந்து, மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிா்கள் அதிகரிக்கும்.
அயோத்தியாபட்டணம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து, துவரை, கம்பு, இராகி, குதிரைவாலி, நெல் ஆகிய சான்று பெற்ற விதைகளும், வாழப்பாடியில் நெல், நிலக்கடலை, உளுந்து விதைகளும், நுண்ணுயிா் உரங்களும் மானிய விலையில் தயாா் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் எண், நில உரிமை ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலக இடுபொருள் விற்பனை மையத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.