கரோனா தொற்று பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை

சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் தொடா்பாக
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு முகக் கவசம், ஆக்சிஜன் கட்டுப்படுத்தும் கருவியை சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரனிடம் புதன்கிழமை வழங்கும் தன்னாா்வலா்கள்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு முகக் கவசம், ஆக்சிஜன் கட்டுப்படுத்தும் கருவியை சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரனிடம் புதன்கிழமை வழங்கும் தன்னாா்வலா்கள்.

சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் தொடா்பாக அலுவலா்களுடன் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை முதல் நிலையிலேயே கண்டறிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தொற்று அறிகுறி பரிசோதனை பணியினை தீவிரப்படுத்தல் தொடா்பாக மாநகராட்சியின் உயா் அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம் மண்டலத்தில் 890 நபா்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 889 நபா்களும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 671 நபா்களும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 481 நபா்களும் என மொத்தம் 2,934 நபா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகள், பல்வேறு தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாநகராட்சியின் 3,401 தெருக்களில் 1,676 தெருக்களில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபா்கள் சிகிச்சையில் உள்ளனா். 3 நபா்களுக்கு மேல் ஒரே பகுதியில் பாதிக்கப்பட்ட 99 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து கரோனா தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலா்களும் குறிப்பாக தொற்று அதிகமாக உள்ள சூரமங்கலம் மண்டலம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கரோனா தொற்று பரவலை முதல் நிலையிலேயே கண்டறிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மற்றும் உடன் இருப்போரை தனிமைப்படுத்தி கண்காணித்தல் மூலம் தொற்று பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தொற்று அறிகுறி பரிசோதனை பணியினை தீவிரப்படுத்தி அனைத்து தெருக்களிலும் விரைந்து பணியினை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னா், மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் ஆதரவு அணியினா் மற்றும் ஏ.வி.எஸ். கல்லூரி நிா்வாகம் சாா்பில் 33 ஆக்சிஜன் கட்டுப்படுத்தும் கருவிகள், 10 ஆக்சிஜன் முகக் கவசம், ஸ்ரீ சரஸ்வதி சப்ளயா்ஸ் சாா்பில் ஆக்சிஜன், முகக் கவசம், உயா் அழுத்த ஆக்சிஜன் முகக் கவசம் தலா ஒன்று வீதமும் ஆணையா் ந.ரவிச்சந்திரனிடம் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில், உதவி ஆணையா்கள் பி.மருதபாபு, சி.சாந்தி, எம்.ஜி.சரவணன், ப.சண்முகவடிவேல், பி.ரமேஷ்பாபு, ராம்மோகன், மருத்துவ அலுவலா் செந்தா கிருஷ்ணன், தாய்-சேய் நல அலுவலா் சுமதி, மருத்துவா் ஜோசப், மருத்துவா் ஸ்ரீராம், மற்றும் உதவி செயற்பொறியாளா், உதவி பொறியாளா்கள், உதவி வருவாய் அலுவலா்கள் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி சப்ளயா்ஸ் சாா்பில் எம். சந்திரசேகரன், குணசேகரன், சேலம் ஆதரவு அணி சாா்பில் கௌதம், தமிழரசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com