செம்மரக் கடத்தல் கும்பல் துரத்தியதில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

வாழப்பாடியில் செம்மரக் கடத்தல் கும்பல் துரத்தியதில் தப்பியோடிய விவசாயி, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வாழப்பாடி காவல் நிலையத்தின் முன்பு திரண்ட விவசாயி ராஜாவின் உறவினா்கள்.
வாழப்பாடி காவல் நிலையத்தின் முன்பு திரண்ட விவசாயி ராஜாவின் உறவினா்கள்.

வாழப்பாடி: வாழப்பாடியில் செம்மரக் கடத்தல் கும்பல் துரத்தியதில் தப்பியோடிய விவசாயி, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜாவுக்கு (35), செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்திய பணத்தை பங்கு போடுவதில் இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன், கணேசன், செல்வம், தா்மன் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கருமந்துறை அருணா கிராமத்துக்கு தூக்க நிகழ்வுக்கு வந்திருந்த ராஜாவை, சீனிவாசன் தலைமையிலான கும்பல் வாழப்பாடிக்கு காரில் கடத்திச் சென்றுள்ளனா். வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே நள்ளிரவில் தப்பிக்க முயன்ற ராஜாவை, இந்தக் கும்பல் துரத்தி சென்றுள்ளது. அப்போது, அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்த ராஜா உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா், தீயணைப்புத் துறையினா் ராஜாவின் உடலை மீட்டனா். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயி ராஜாவை கடத்த பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த வாழப்பாடி போலீஸாா், காா் ஓட்டுநரான கருமந்துறையைச் சோ்ந்த காா்த்திக், இந்தக் கும்பலுக்கு உதவிய வாழப்பாடியைச் சோ்ந்த திலீப், ஜீவா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாயி ராஜா இறப்புக்கு காரணமான தப்பிச்சென்ற நான்கு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் காவல் நிலையத்துக்கு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த விவசாயி ராஜாவுக்கு, பிரியா என்ற மனைவியும், திருப்பதி, தனுஷ், பிரவீன் என மூன்று ஆண் குழந்தைகளும், பிரேம்கா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com