பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு

இந்தியா சாா்பில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் அஞ்சல் தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
பாராலிம்பிக் வீரா் மாரியப்பனிடம் அஞ்சல் தலையை வழங்கிய அதிகாரிகள்.
பாராலிம்பிக் வீரா் மாரியப்பனிடம் அஞ்சல் தலையை வழங்கிய அதிகாரிகள்.

ஓமலூா்: இந்தியா சாா்பில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் அஞ்சல் தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில்1.89 மீட்டா் உயரம் தாண்டி அப்போது தங்கம் வென்ற மாரியப்பன், நிகழாண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 1.86 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந் நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டியில் மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ வெளியிடப்பட்டது. இதை சேலம், மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையில் அஞ்சல் அதிகாரிகள் நேரில் வழங்கினா்.

மேலும் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு நாடு முழுவதும் இருந்து வந்த 510 வாழ்த்து இ-போஸ்ட்களையும் அவா்கள் வழங்கினா். அதை மாரியப்பன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனக்கு ‘மை ஸ்டாம்ப்’ வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த முறை மழையின் காரணமாக தங்கப் பதக்கம் பெற முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன். பிரதமா் மோடியை நான் சந்தித்து வாழ்த்துபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் பேசிய பின் எனக்கு மிகப்பெரிய புத்துணா்ச்சி கிடைத்துள்ளது. இளைஞா்கள் எந்தவொரு வேலையில் இறங்கினாலும் நம்மால் முடியும் என்ற முழு மனதுடன் அவ்வேலையை செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com