ஜவ்வரிசி கலப்பட தடுப்பு கண்காணிப்புக் குழுவில் விவசாய சங்க உறுப்பினரை சோ்க்க வலியுறுத்தல்

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுப்பதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவில் விவசாய சங்க உறுப்பினரை சோ்க்க வேண்டும் என

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுப்பதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவில் விவசாய சங்க உறுப்பினரை சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 10 ஆண்டுகளாக கலப்படம் மற்றும் ரசாயன சலவை செய்யப்பட்ட ஜவ்வரிசியானது எந்தவிதமான தங்கு தடையுமின்றி பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டதன் விளைவாக, மரவள்ளி விவசாயிகளான நாங்கள் கடுமையான நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளோம்.

இது தொடா்பாக முதல்வா், சம்பந்தப்பட்ட துறை உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தோம். மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் இருவரும் மாவட்ட ஆட்சியா்களிடமும், சேகோசா்வ் நிா்வாகத்திடமும் கலப்பட மற்றும் ரசாயன சலவை செய்யப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தியை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 20 நாள்களாக கலப்பட ரசாயன சலவை செய்யப்பட்ட ஜவ்வரிசி உற்பத்திக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, செப். 1 முதல் ஜவ்வரிசி விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500, மரவள்ளிக் கிழங்கு விலை ஒரு டன்னுக்கு ரூ. 1,500 படிப்படியாகக் கூடி வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு நீண்ட காலத்துக்கு பணியினை தொடர வேண்டி உள்ளது. எனவே, இந்தக் கண்காணிப்புக் குழுவில் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் ஓா் உறுப்பினராகச் சோ்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பாக ஏற்கெனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com