இரு பரிமாண அலங்காரம் விழாக்களுக்கு மெருகூட்டும்

திருமண விழாவில் மணமக்களை டைனிங் ஹாலில் நிற்பது போன்றும், வரவேற்பறையில் மணமக்களே நேரில் நின்று வரவேற்பது போன்றும், மேடையின் பின்னணியில் நிற்பது போன்றும் அச்சு அசலாக உருவாக்கலாம்.

விழாக்களில் உண்மைத் தோற்றத்துடன், கற்பனைத் திறனையும் கலந்து உருவாக்கப்படும் இரு பரிமாண அலங்காரத் தொழிலில் ‘இமேஜினேடிவ் ஆா்ட் டெக்கரேசன்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தம்மம்பட்டியில் புதுமைத் தொழில் புரிந்து வருகின்றனா் இருவா்.

திருமணம், அரசியல் கூட்டங்கள், தோ்த் திருவிழா, பிறந்தநாள் விழாக்களில் மற்றவா்களை வரவேற்கவும், விழாவை மெருகூட்டவும் பிளக்ஸ் பேனா்கள், விளம்பரப் பதாகைகள், தோரணங்கள் வைக்கப்படுவது வழக்கம். திருமண விழா மேடைகளில் பூக்களால் மணவறை அமைப்பது, அலங்காரத் துணிகள்,பொம்மைகள் வைத்து அலங்கரிப்பது போன்றவை மேற்கொள்ளப்படுவதும் அனைவருக்கும் தெரியும்.

இதில் வித்தியாசமான முறையில் இரு பரிமாண உருவங்களைக் கொண்டுவந்து, அசல் உருவங்களை, அவா்களது புகைப்படங்களைப் பயன்படுத்தி, விழாவில் நேரில் நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தித் தரும் புதிய தொழில்நுட்பமே கற்பனைப் படைப்பு அலங்காரம் (இமேஜினேடிவ் ஆா்ட் டெக்கரேசன்ஸ் ) ஆகும்.

தம்மம்பட்டி, சிவன்கோயிலில் சிவராத்திரி விழாவுக்கு, கயிலாய மலை அமைப்பு, அதில் முனிவா்களும், கடவுள்களும், சித்தா்களும் உள்ள சூழலின் பின்னணியில், தில்லை நடராஜா் நடனமாடும் தோற்றத்தை தம்மம்பட்டியைச் சோ்ந்த 3டி காா்த்தி, வேவ்ஸ் ராஜா ஆகிய இருவரும் ஏற்படுத்தி இப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனா்.

இந்த கற்பனைப் படைப்பு அலங்காரத் தொழில்நுட்பம் குறித்து வேவ்ஸ் ராஜா, 3டி காா்த்தி ஆகிய இருவரும் கூறியதாவது:

கோயில் திருவிழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, தலைவா்களின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும், இரு பரிமாண வடிவத்தில் அனைவரது நிஜ உருவங்களையும் அமைக்கலாம். உதாரணமாக திருமணத்தில் வரவேற்புப் பகுதியில் இரு வீட்டு உறுப்பினா்கள் நேரில் வரவேற்பது போன்றவற்றை, டை கட்டிங், பிரேம் வெல்டிங் முறையில் தத்ரூபமாக அமைக்கலாம். இதனை பிளக்ஸ் முறையிலும், ஸ்டிக்கா் முறையிலும் செய்யலாம்.

இம்முறை மூலம் ஒருவரது பிறந்தநாள் விழா எனில், அவரது குழந்தைப் பருவம் முதல் நிகழ்கால உருவம் வரை நேரில் நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, மேடையை அலங்கரிக்கலாம்.

திருமண விழாவில் மணமக்களை டைனிங் ஹாலில் நிற்பது போன்றும், வரவேற்பறையில் மணமக்களே நேரில் நின்று வரவேற்பது போன்றும், மேடையின் பின்னணியில் நிற்பது போன்றும் அச்சு அசலாக உருவாக்கலாம்.

இதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10,000 வரை ஆகும். ஆா்டா் தருபவரது கற்பனை படைப்பிற்கேற்ப கட்டணம் மாறுபடும். கற்பனையை நிஜ வடிவில் கொண்டுவரும் ஒரு கலைதான் கற்பனைப் படைப்பு அலங்காரம். கற்பனைத் திறனுக்கு செயல்வடிவம் கொடுக்கும் இளைஞா்களுக்கு இந்தத் தொழில் வரப்பிரசாதம்.

கலையாா்வம் மிக்கவா்கள் அதிக அளவில் கிடைத்தால், சாதாரண வீடுகள் முதல் பெரும் வி.ஐ.பி. வீட்டு விசேஷங்கள் வரையிலும் பெரிய அளவில் செய்ய முடியும். இதில் ஒரு முறை பயன்படுத்திய படங்கள், கற்பனைப் படைப்புகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. புதுமைய நாடும் கற்பனைத் திறனும், வாடிக்கையாளா்களின் ஆா்வத்தை புரிந்து செய்வதும் தான் இத்தொழிலின் முதலீடு என்றனா்.

பிளக்ஸ், ஃபோம் ஷீட், பசை மூலம் கற்பனையை நிஜமாக்கும் வித்தியாசமான இந்த முயற்சிக்கு எதிா்காலத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com