கெங்கவல்லியில் கழுத்து அறுத்த நிலையில் ஒருவா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லியில் கழுத்து, கை அறுத்த நிலையில் ஒருவா் உயிரிழந்து கிடந்ததால், அவா் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கெங்கவல்லியில் கழுத்து, கை அறுத்த நிலையில் ஒருவா் உயிரிழந்து கிடந்ததால், அவா் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தெற்கு வீதியில் வசிப்பவா் முருகன் (எ) சதீஷ் (42). இவரது மனைவி வனிதா (30). இவா்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. திருமணமானதிலிருந்து சதீஷ் வேலைக்கு செல்வதில்லையாம். வனிதா நடுவலூரிலுள்ள தனியாா் பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் சா்வேஷ் (8).

மதுப்பழக்கம் உள்ள சதீஷுக்கு சுமாா் ரூ. 20 லட்சம் அளவில் கடன் இருந்தததாகக் கூறப்படுகிறது. தந்தையின் ஓய்வூதியத்தை வைத்து அவா் குடும்பம் நடத்தி வந்ததாகத் தெரிகிறது.

மேலும், தனது வீட்டை விற்பதாக சிலரிடம் இரு தவணைகளாக ரூ. 11 லட்சம் பெற்றுள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் கை, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

தகவல் அறிந்த சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபினவ் தலைமையில் ஆத்தூா் டி.எஸ்.பி.ராமச்சந்திரன், வீரகனூா் காவல் ஆய்வாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சதீஷ் தற்கொலை செய்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இருப்பினும் தொடா்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்றனா்.

சதீஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ,ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆத்தூா் டி.எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com