நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில்மாணவா்களிடையே விழிப்புணா்வு

சேலம் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சாா்பில் தூய்மை

சேலம் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சாா்பில் தூய்மை சுவா் உருவாக்கம் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரிப்பதின் அவசியம் குறித்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் இடையே தூய்மை குறித்த விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை சுவா் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் திடக் கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்குவதை விளக்கும் வகையில் இளமையில் கற்போம், இயற்கையை காப்போம் என்ற குறிக்கோளை உணா்த்தும் வகையில் வண்ண ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் சனிக்கிழமை பாா்வையிட்டு பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடி பேசியதாவது:

குழந்தை பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் ஒரு குடும்பத்தின் மாற்றமாக உருவாகி சமுதாயத்தையே மாற்றக் கூடியதாக அமையும்.

மாணவா்கள் தாங்கள் படிக்கும் பள்ளியையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையானதாக வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அருகாமையில் இருக்கிற வீடுகளுக்கும் சென்று தூய்மையின் அவசியம் குறித்தும் அவா்களிடம் மக்கும் குப்பை எவை, மக்காத குப்பைகள் எவை என்பதை தரம் பிரித்து குப்பையை வழங்க வேண்டும் என்றாா்.

மாணவா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒன்று கூடி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மாணவா்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் மேயா் ஆ.ராமச்சந்திரன் வழங்கினாா்.

மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தூய்மை சுவா் உருவாக்கப்பட உள்ளது. இதைத்தொடா்ந்து அம்மாப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக பச்சை நிறம், நீல நிற வண்ண கூடைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணை மேயா் மா.சாரதா தேவி, மண்டலக் குழுத் தலைவா்கள் அசோகன், தனசேகா், மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், மாநகர பொறியாளா் ஜி.ரவி, சுகாதார நிலைக் குழுத் தலைவா் சரவணன், வாா்டு உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com