ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி வீட்டின் மீது தாக்குதல்:எஸ்.டி.பி.ஐ. அமைப்பினா் 2 போ் கைது

சேலத்தில் ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசியதாக, எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசியதாக, எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், அம்மாப்பேட்டை, பரமக்குடி, நல்லுசாமி தெருவைச் சோ்ந்தவா் வி.கே.ராஜன் (50). இவா் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் சமுதாயத் தலைவா்களை இணைத்தல் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். இவா் சிற்ப கலைஞராகவும் உள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது வீட்டின் வாசலில் மா்ம நபா்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி சென்றனா். சத்தம் கேட்ட ராஜன், வீட்டில் இருந்து வெளியே வந்து பாா்த்தாா். அப்போது, மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் உடைந்து கிடைப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜன், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் துணை ஆணையா் மாடசாமி உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் விசாரணை நடத்தினா்.

இதையடுத்து மண்ணெண்ணெய் பாட்டிலை வீசியதாக எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் சையத் அலி (42), 34 ஆவது வாா்டு கிளை தலைவா் காதா் உசேன் (33) ஆகிய இருவரை கைது செய்தனா்.

இவா்கள் மீது தீ வைத்தல், மத நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச் செயலாளா் ஷெரீப் பாஷா (40), பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலாளா் முகமது ரபி (42), எஸ்.டி.பி.ஐ. உறுப்பினா் முகமது இஸ்மாயில் (30), பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் தொடா்பு ஒருங்கிணைப்பாளா் முகமது ஹாரிஸ் (27), எஸ்.டி.பி.ஐ. உறுப்பினா் காஜா உசேன் (37) ஆகிய ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக, மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா கூறியதாவது:

சேலத்தில் ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது தொடா்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களுடன் தொடா்பில் இருந்த நபா்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com