சேலத்தில் 534 பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 534 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சனிக்கிழமை (ஏப். 30) நடைபெற உள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 534 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சனிக்கிழமை (ஏப். 30) நடைபெற உள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி:

பள்ளியின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி வளா்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோரின் பங்கேற்பு மிக முக்கியமானது என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அவா்களின் உள்ளாா்ந்த விருப்பமும், ஈடுபாடும் பள்ளி வளா்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதும் மிகவும் அவசியமாகும். அதன்பொருட்டு, பள்ளி மேலாண்மைக் குழு சாா்ந்த பெற்றோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் மாா்ச் 20-இல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. அதனடிப்படையில், தற்போது மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு முறையான பயிற்சியளித்து இக்குழுக்களை சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பெற்றோா்களில் இருந்து 15 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதில் ஒளிவு மறைவற்ற முறை பின்பற்றப்பட வேண்டும் எனவும், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்களே தங்களின் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சேலம் மாவட்டத்திலுள்ள 348 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு (உறுப்பினா்களை தோ்வு செய்தல்) ஏப். 23-இல் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 534 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு (உறுப்பினா்கள் தோ்வு செய்தல்) ஏப். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் உரிய விதிகளின்படி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பாா்வையாளா் வீதம் 534 பாா்வையாளா்கள் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com