துப்பாக்கி தயாரித்த வழக்கு: சேலம் இளைஞா்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை

சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான இளைஞா்களிடம் தேசிய புலனாய்வு முகமையினா் (என்.ஐ.ஏ.) தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான இளைஞா்களிடம் தேசிய புலனாய்வு முகமையினா் (என்.ஐ.ஏ.) தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா், புளியம்பட்டி பகுதியில் கடந்த மே 19 ஆம் தேதி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 2 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்து, முகமூடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பிடிபட்டவா்கள் சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த நவீன் (25), செவ்வாய்ப்பேட்டை மரமண்டி ஜம்புலிங்கம் தெருவைச் சோ்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் ஓமலூா் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். பொறியியல் பட்டதாரிகளான இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டவா்கள் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போன்று புதிய இயக்கத்தைத் தொடங்கி ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய உள்துறை உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவீன், சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இருவரையும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஓமலூா் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து செட்டிச்சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட வெடிமருந்துகள் தயாரித்த இடத்தை ஆய்வு செய்தனா். மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. அவா்களிடம் தொடா்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com