மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை பெற 4 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

1-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் ரூ. 1,000 முதல் ரூ. 7,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் கை, கால் இயக்கக் குறைபாடு, தசை சிதைவு நோய், குள்ளத்தன்மை, முடக்கு வாதம், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகள் நல்ல நிலையில் உள்ள நபா்களை திருமணம் செய்து கொண்டவா்களையோ அல்லது மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டால் வருமான உச்சவரம்பின்றி, கல்வித் தகுதி அடிப்படையில் இல்லாமல் திருமண உதவித் தொகை ரூ. 25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

இதில் தம்பதிகளில் ஒருவா் பட்டதாரியாக இருந்தால் ரூ. 50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சுயத் தொழில் புரிய வங்கி கடன் ரூ. 75 ஆயிரத்தில் ரூ. 25,000 மானிய பரிந்துரையுடன் வழங்கப்படுகிறது.

ஆவின் பாலகம் அமைப்பதற்கு ரூ. 50,000 முழு மானியமாகவும் வங்கிக் கடன் பரிந்துரையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வட்டியில்லா வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

படித்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன், மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத வைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. மேலும், சுயத் தொழில் வங்கி கடன் திட்டத்தில் பயனடைய இணையதள வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com