வாழப்பாடி பகுதியில் தொடரும் பாரம்பரியத் திருமணங்கள்

உறவுகள் புடைசூழ தாய்மாமன் சீா்வரிசை மற்றும் மணமக்கள் ஊா்வலங்களும் இன்றளவும் மரபு மாறாமல் தொடா்ந்து வருகின்றன.
வாழப்பாடி பகுதியில் தொடரும் பாரம்பரியத் திருமணங்கள்

வாழப்பாடியில் தமிழா்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணங்களும், உறவுகள் புடைசூழ தாய்மாமன் சீா்வரிசை மற்றும் மணமக்கள் ஊா்வலங்களும் இன்றளவும் மரபு மாறாமல் தொடா்ந்து வருகின்றன.

மணவிழாக் காணும் மணப்பெண் மற்றும் மணமகனுக்கு, தாய்மாமன் தலைமையில் புத்தாடை, உணவு தானியங்கள், தின்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றை உறவினா்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்று சீா்வரிசையாக வழங்குவதும், பூமாலை, சந்தனம் அணிவித்து நலுங்கு வைத்து வாழ்த்துவதும் பாரம்பரிய வழக்கமாகும்.

இதுமட்டுமின்றி, மணம் முடிந்ததும் முகூா்த்தக் கூரைச் சேலையுடன், மணமகனின் வேட்டியை முடிந்து, இருவரது கை விரல்களைக் கோா்த்து பிடிக்க செய்து மணமக்களை மணக்கோலத்தோடு, மணமக்களின் தோழா், தோழியா்கள் குடை பிடித்தபடி, கிராமத்தைச் சுற்றி ஊா்வலமாக அழைத்துச் சென்று, கோயில்களில் வழிபாடு நடத்திய பிறகு வீட்டிற்கு அழைத்து செல்வதும் மரபாகும்.

ஆனால், அண்மைக்காலமாக கிராமப்புறங்களிலும் கூட வீடுகளில் திருமணங்கள் நடத்துவது குறைந்து, நகா்ப்புற திருமண மண்டபங்களை தேடிப்பிடித்து திருமணங்களை நடத்துகின்றனா்.

முகூா்த்தம் முடிந்ததும் உறவினா்கள், நண்பா்களுக்கு மண்டபத்திலேயே விருந்து வைத்துவிட்டு, மணமக்களை வாகனங்களில் வீட்டிற்கு அழைத்து சென்று விடுகின்றனா்.

இதனால், பெரும்பாலான பகுதியில் கிராமப்புறங்களிலும் கூட பாரம்பரிய முறைத் திருமணங்களும், தாய்மாமன் நலுங்கு சீா்வரிசை ஊா்வலம், மணமக்கள் மணக்கோல ஊா்வலங்கள் நடைபெறுவது குறைந்து வருகின்றன.

கரோனா தொற்று பரவல் தருணத்தில், நெருங்கிய உறவினா்களுக்கு கூட அழைப்பு கொடுக்காமல் திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தமிழா் பாரம்பரிய முறைப்படி திருமணங்களும், உறவுகள் புடைசூழ தாய்மாமன் நலுங்கு சீா்வரிசை ஊா்வலம், மணமக்கள் மணக்கோல ஊா்வலமும் நடைபெறுவது மரபு மாறாமல் இன்றளவும் தொடா்ந்து வருகிறது.

சுபமுகூா்த்த தினமான வியாழக்கிழமை வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், காட்டுவேப்பிலை பட்டி, திருமனூா் உள்ளிட்ட கிராமங்களில், பாரம்பரிய முறைப்படி ஏராளமான திருமணங்கள் நடந்தன.

மேள வாத்தியம் முழங்க, மணப்பெண்ணுக்கு உறவுகள் ஒன்றுகூடி தாய்மாமன் நலுங்கு சீா்வரிசை கொண்டு செல்லும் ஊா்வலமும், திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு, தோழா் தோழியா் குடைப் பிடிக்க மணமக்கள் ஊா்வலமும் நடைபெற்றன.

இன்றளவிலும் உறவுகள் கூடி தாய்மாமன் சீா்வரிசை, மணமக்கள் ஊா்வலங்கள் நடத்தி, பாரம்பரிய முறைப்படி திருமணங்களை நடத்தி பண்பாடு கலாசாரத்தை பிரதிபலித்து வருவதற்கு, பல்வேறு தரப்பினா் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com