சொந்த செலவில் சாக்கடை மேல்தளம், தெரு விளக்குகள்: வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலருக்கு பாராட்டு
By DIN | Published On : 18th March 2022 10:47 AM | Last Updated : 18th March 2022 10:47 AM | அ+அ அ- |

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், சொந்த செலவில் சாக்கடை மேல்தளம், தெரு விளக்குகள் அமைத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மன்ற 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக நகர செயலாளர் சிவக்குமார், திமுக நகர செயலாளர் செல்வம் ஆகிய இருவரும் நேருக்குநேர் போட்டியிட்டனர்.
பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்களான இருவரும் ஒரே வார்டில் போட்டியிட்டதால் இந்த வார்டு மிகுந்த முக்கியத்துவம் பெற்றதோடு, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றார். ஆனால், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் பேரூராட்சி மன்ற தலைவராகும் வாய்ப்பை சிவக்குமார் இழந்தார்.
இருப்பினும், தனது வார்டு வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிவக்குமார், தனது சொந்த செலவில் கழிவுநீர் சாக்கடைக்கு சிமெண்ட் கான்கிரீட் மேல் தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதுமட்டுமன்றி, வார்டு முழுவதும் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நவீன எல்இடி தெரு விளக்குகளை பொருத்தி கொடுத்துள்ளார்.
பேரூராட்சி மன்ற தலைவராகும் வாய்ப்பை இழந்த நிலையிலும், வார்டு வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தனது சொந்த செலவில் நிறைவேற்றிய அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிவக்குமாருக்கு, இப்பகுதி பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...