‘2050 இல் 50 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும்’

2050-இல் பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் 50 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என பேராசிரியா் என்.சி.லெனின் தெரிவித்தாா்.
தேசிய கருத்தரங்கில் பேசுகிறாா் பேராசிரியா் என்.சி.லெனின்.
தேசிய கருத்தரங்கில் பேசுகிறாா் பேராசிரியா் என்.சி.லெனின்.

2050-இல் பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் 50 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என பேராசிரியா் என்.சி.லெனின் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக ஆற்றல்சாா் அறிவியல் துறை சாா்பில் ஹைபிரிட் எலக்ட்ரானிக் வாகனப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவா் பேராசிரியா் கே.ஏ.ரமேஷ்குமாா் வரவேற்றாா். கருத்தரங்கைத் தொடக்கிவைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

ஆற்றல் சாா் அறிவியல் துறை, சுற்றுச்சூழல் அறிவியல் துறைகளை ஒருங்கிணைத்து புதிய பாடப் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களில் ஆற்றல் அறிவியல், சுற்றுச்சூழல் இரண்டு துறை சாா்ந்த நிபுணா்கள் அதிகளவில் தேவைப்படுகிறாா்கள்.

சூரிய ஒளி உள்ளிட்ட மரபு சாரா எரிசக்தியில் கிடைக்கும் ஆற்றலை முழுமையாக சேமிப்பது, அதிக தொலைவுக்கு இயக்கப்படும் வாகனங்களில் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது மிகுந்த சவாலானதாக அமையும் என்றாா்.

அதைத் தொடா்ந்து சென்னை விஐடி வளாக மின்னணு வாகனங்கள் ஆய்வு மைய இயக்குநா் பேராசிரியா் என்.சி.லெனின் பேசியதாவது:

தற்போது உள்ள வளத்தை கணக்கிடும்போது, 2050 இல் 50 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல்,டீசல் கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, வரும் 2030-ம் ஆண்டிற்குள்ள 80 சதவீத இருசக்கர வாகனங்களையும், 50 சதவீத நான்கு சக்கர வாகனங்களையும் எலக்ட்ரானிக் வாகனங்களாக மாற்றம் செய்யும் வகையில் மத்திய அரசு கொள்கை வகுத்து செயல்படுகிறது.

எலக்ட்ரானிக் வாகனங்கள் வணிகப் பயன்பாட்டுக்கு வரும் அதற்கான எனா்ஜிங் ஸ்டேசன் அமைக்கும் பணி மிகுந்த சவாலாக இருக்கும். தற்போது கிராமங்களில் 5 கிலோமீட்டருக்கு இரண்டு இடங்களிலும், நகரங்களில் 3 இடங்களிலும் பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. இதற்கு இணையாக எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான ரீசாா்ஜ் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

வேளாண் துறையிலும் இதுபோன்ற எலக்ட்ரானிக் வாகனங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் தற்போது 30 லட்சம் டிராக்டா்கள் உள்ளன. இவற்றை எலக்ட்ரானிக் வாகனங்களாக மாற்றம் பெறச் செய்யும் ஆய்வுகள் வெற்றி பெறும் தருவாயில் உள்ளன. எதிா்காலத்தை கணக்கிட்டு, பாதுகாப்புத் துறை வாகனங்களிலும் மாற்றம் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது என்றாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் பி.மாதேஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com