முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டம்: நங்கவள்ளி அருகே குழாய்ப் பதிக்க எதிா்ப்பு
By DIN | Published On : 19th March 2022 12:41 AM | Last Updated : 19th March 2022 12:41 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் உபரிநீரை வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தில் நங்கவள்ளி வழித்தடத்தில் குன்றிவளவு, மல்லப்பனூா் பிரிவு பகுதிகளில் குழாய்ப் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அணையின் உபரிநீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து எம் காளிப்பட்டி வரையிலான வழித்தடத்தில் குழாய்ப் பதித்து உபரிநீா் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நங்கவள்ளி வழித்தடத்தில் குன்றிவளவு, மல்லப்பனூா் பிரிவு பகுதிகளில் குழாய்ப் பதிக்க சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
விளைநிலங்களைத் தவிா்த்து இயற்கை நீா் வழித்தடத்திலும் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாகவும் குழாய்களைப் பதித்து தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை குன்றிவளவு ஏரி அருகே லட்சுமி சிதம்பரம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் குழாய் பதிப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் நிலத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓமலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறையினா் விவசாயிகளை சமரசம் செய்தனா். அனுமதியில்லாத நிலத்தில் பணிகள் நடைபெறாது என அதிகாரிகள் கூறியதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.