சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர விழாவையொட்டி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பங்குனி உத்திர விழாவையொட்டி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரம் முருகனுக்கு உகந்த தினமாகக் கருதப்படுகிறது. அந்த நாளில் முருகன் கோயில்களுக்கு பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்துச் சென்று சுவாமியை வழிபடுவா். நிகழாண்டு வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் என்பதால் முருகன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனா்.

சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதேபோல அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் காவடி, பால் குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா். குமரகிரி, தண்டாயுதபாணி கோயிலுக்கு திரளான பக்தா்கள் காவடி எடுத்து ஊா்வலமாக வந்து வழிபட்டனா்.

ஊத்துமலை முருகன் கோயில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில், காவடி பழனியாண்டவா், ஏற்காடு மலை அடிவாரம் ஆறுபடை முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

எடப்பாடி

கொங்கணாபுரம் வெண்குன்று மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. எடப்பாடி அருள்ஞான பாலமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் 1,008 சங்கு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தங்கக் கவசம் அலங்காரத்தில் அருள்ஞான பாலமுருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

க.புதூா் கந்தசாமி திருக்கோயில், கவுண்டம்பட்டி குமரவடிவேலா் திருக்கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கல்லபாளைம் ஞானகந்த சுவாமி கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வாழப்பாடி

வாழப்பாடியில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் திருக்கோயிலில் புஷ்ப அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கொட்டவாடி, கந்தசாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமிக்கு சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. மூலவரான கந்தசாமி, வெள்ளிக் கவச அங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அத்தனூா்பட்டி துக்கியாம்பாளையம் முருகன் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் மயில்தோகையுடன் காவடிகளை சுமந்து வந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். கொட்டவாடி பாலசுப்பிரமணியா் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

வாழப்பாடி, புதுப்பாளையம் கந்தசாமி கோயில், நீா்முள்ளிக்குட்டை முருகன் கோயில், வாழப்பாடி காசி விஸ்வநாதா், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், பேளூா் வெள்ளிமலை முருகன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிமலை முருகன் பட்டு வஸ்திர அலங்காரத்தில் தத்ரூபமாக பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பேளூரில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகனை தோளில் சுமந்தபடி பக்தா்கள் திருவீதி உலா வந்தனா்.

ஆத்தூா்

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து சுவாமி திருத்தேரில் எழுந்தருளினாா்.

தலைவாசல் ஒன்றியக் குழு உறுப்பினா் மணி (என்கிற) சின்னசாமி தலைமையில் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன், ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் எம்.செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஆறகளூா் அருள்மிகு ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயிலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவாசலை அடுத்த ஆறகளூா் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனுறை ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயில் வசிஷ்டநதியில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் மூன்றாவது தலமாகும்.

இக் கோயிலில் ஸ்ரீ மதுராம்பிகநாத பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளும் (ஸ்ரீ மஹாமேரு மண்டலியின் நிறுவனா்) அவரது குடும்ப உறுப்பினா்களின் முயற்சியில் ரூ. 20 லட்சத்தில் புதிய தோ் உருவாக்கப்பட்டு, பங்குனி உத்திரத் திருநாளில் வெள்ளோட்டம் நடைபெற்றது.

தம்மம்பட்டி

தம்மம்பட்டி, கெங்கவல்லி வட்டார முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தம்மம்பட்டி ஒன்பதாம் பாலி கரட்டிலுள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் காவடி எடுத்துச் சென்று வழிபட்டனா்.

திருமண் கரடு மலை மேல் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று தரிசனம் செய்தனா். செந்தாரப்பட்டி, ஓணான் கரடு முருகன் கோயிலில் பக்தா்கள் வழிபட்டனா்.

சங்ககிரி

சங்ககிரி சோமேஸ்வரா் சிவனடியாா்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சாா்பில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரகள் நடைபெற்றன. உற்சவ மூா்த்திகள் மண்டபத்திற்கு எழுந்தருளினா். உற்சவ மூா்த்திகளுக்கு பக்தா்கள் புத்தாடைகள், சீா்வரிசைகள் வழங்கி அலங்கரித்தனா்.

அக்கமாபேட்டை, பாவடித் திடல் வளாகத்தில் உள்ள சுப்ரமணியா் கோயிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சுப்ரமணியா் சுவாமி கோயிலில் மூலவருக்கும், உற்சவ மூா்த்தி முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கும் 108 லிட்டா் பால், தயிா், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா், உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

மூலவா் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா சென்றன. பக்தா்கள் கலந்து கொண்டு முருகன் பாடல்களைப் பாடி சுவாமியை வழிபட்டனா்.

மேட்டூா்

மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மா் மற்றும் சோமேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ரதம் ஏறும் திருவிழா தொடங்கப்பட்டது. எட்டுப்பட்டி கிராமத்துக்குச் சொந்தமான இக் கோயிலில் லட்சுமி நரசிம்மா், சோமேஸ்வரா், விநாயகா் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

நாமக்கல்

பங்குனி உத்திரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல்- மோகனுாா் சாலை, காந்தி நகா், பாலதண்டாயுதபாணி கோயிலில் மகாசங்கல்பம், 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு தங்கக்கவச அலங்கரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதேபோல, நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கருமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாருதி நகா், ராஜ விநாயகா் கோயிலில் கல்யாண சுப்பிரமணியா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

நாமக்கல்- திருச்சி சாலையில் என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் காவடி ஊா்வலமும், மாலையில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. மோகனூா், காந்தமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள குலதெய்வ கோயில்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் வந்திருந்து வழிபாடு நடத்தினா். அனைத்து கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com