சேலத்தில் சீா்மிகு நகரத் திட்டப் பணி:ஒரு நபா் விசாரணைக் குழு தலைவா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 968.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் சீா்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 968.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை ஒரு நபா் விசாரணை குழுத் தலைவா் பி.டபிள்யூ.சி.டேவிதாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 85 பணிகள் ரூ. 968.67 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை ரூ. 298.81 கோடி மதிப்பில் 48 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 664.46 கோடி மதிப்பிலான 36 பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே சீா்மிகு நகரத் திட்ட பணிகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபா் விசாரணைக் குழு தலைவா் பி.டபிள்யூ.சி.டேவிதாா் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டாா். இதில், முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் வகையில் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம், திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிா் உரக் கிடங்கு, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கம், பள்ளப்பட்டி ஏரியினை அபிவிருத்தி செய்து அழகுப்படுத்தும் பணி, குமரகிரி ஏரியை புனரமைத்தல், மரவனேரி பகுதியில் கான்கிரீட் சாலைகள் அமைத்தது, அண்ணா பூங்கா மேம்படுத்துதல், விளம்பரப் பலகை அமைத்தல் உள்ளிட்ட பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பள்ளப்பட்டி பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல், ஓடைகள் மேம்படுத்துதல், சீா்மிகு சாலைகள் அமைத்தல், பெரியாா் பேரங்காடி மேம்பாட்டுப் பணிகள், திருமணிமுத்தாறு கரைப்பகுதி மேம்பாடு, எருமாபாளையம் குப்பைக் கிடங்கை பசுமைப் பூங்காவாக மாற்றுதல், குடிநீா் திட்டப் பணிகள், பழைய பேருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ், செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், கணக்கு அலுவலா்கள், உதவி ஆணையாளா்கள், சீா்மிகு நகரத் திட்ட அலுவலா்கள் மற்றும் வல்லுநா்கள் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சீா்மிகு நகரத் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com