தமிழகத்தில் 8 ஆண்டுகளில் 639 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மூடல்
By DIN | Published On : 31st May 2022 11:56 PM | Last Updated : 31st May 2022 11:56 PM | அ+அ அ- |

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 639 ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குகளும், சுமாா் 262 ஆள்களால் இயக்கப்படும் லெவல் கிராசிங்குகளும் மூடப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பான ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக உயா் மேம்பாலங்களும், கீழ்மட்ட தரைப்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் அதாவது, 2014 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் 92 மேம்பாலங்களும், தரைப்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
லெவல் கிராசிங்குகளில் ரயில் பாதைகளைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், லெவல் கிராசிங்குகளை முற்றிலும் நீக்கிடும் வகையில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் 639 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல 262 ஆள்களால் இயக்கப்படும் லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலும் இல்லாத நிலையை 2018 செம்படம்பரில் எட்டப்பட்டது. ஆள்களால் இயக்கப்படும் லெவல் கிராசிங்குகளும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.