16 கிலோமீட்டர் தூரம் வரை காரை பின்னோக்கி இயக்கி எடப்பாடி அருகே இளைஞர் சாதனை
By DIN | Published On : 11th September 2022 12:52 PM | Last Updated : 11th September 2022 12:52 PM | அ+அ அ- |

காரை பின்னோக்கி ஓட்டிச் செல்லும் இளைஞர் சந்திரமௌலி.
16 கிலோமீட்டர் தூரம் காரை பின்னோக்கி இயக்கி எடப்பாடி அருகே இளைஞர் சாதனை புரிந்துள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டபேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளியான பூபதி, இவரது மகன் சந்திரமௌலி(35), சிறு வயது முதலே காரை இயக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர், சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி புதியதொரு சாதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி புற வட்ட சாலையில் ஞாயிறு நடைபெற்ற நிகழ்வில், 16 கிலோமீட்டர் 140 மீட்டர் தூரத்தினை 29 நிமிடம் 10 வினாடிகளில் சந்திரமௌலி தனது காரை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் வழக்கறிஞர் குமார் முன்னிலையில், பின்னோக்கி இயக்கி சாதனையை நிகழ்த்திக்காட்டினர்.
இதையும் படிக்க- கேரளத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
ஏற்கனவே கேரள மாநிலம், பந்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த டேசன் தாமஸ் என்பவர் 30 நிமிடங்களில் 14 கிலோமீட்டர் தூரத்தினை காரில் பின்னோக்கி இயக்கிய சாதனையை முறியடித்து சந்திரமௌலி புதிய சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை புரிந்த இளைஞர் சந்திரமௌலியை திமுக மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா, நங்கவள்ளி திமுக ஒன்றிய செயலாளர் சின்னு(எ) அர்த்தனாரீஸ்வரன், அவைத் தலைவர் ராஜு, சேட்டு, எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்ட திரளானோர் வாழ்த்தி, பாராட்டினர்.
தொடர்ந்து சாதனை இளைஞர் சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறுகையில்: சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி இந்த சாதனையை நிகழ்வை மேற்கொண்டதாகவும், இளைஞர்கள் சாலைகள் மற்றும் பொதுவெளிகளில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது எனவும், கட்டாயம் அனைவரும் தலைக்கவசம் அணிந்துவிட வேண்டும் என இந்த சாதனை நிகழ்வின் மூலம் கேட்டுக் கொள்வதாக கூறினார். சாதனை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஜலகண்டாபுரம் ஓம் முருகா நண்பர்கள் குழுவினர் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.