திமுக ஆட்சியில் முதியோா் உதவித்தொகை நிறுத்தம்:எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் முதியோா் உதவித்தொகை நிறுத்தம்:எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டன்புதூரில் எஸ்.எஸ்.கே.ஆா். ஆதரவற்றோா் இலவச முதியோா் இல்லம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு முதியோா் இல்லத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஆதரவற்ற முதியோா்களுக்கு அறுசுவை உணவு பரிமாறினாா்.

பின்னா் நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

அதிமுக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியது. முதியோா் கடைசிக் காலத்தில் சந்தோசமாக வாழ மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. ஆயிரமாக ஜெயலலிதா உயா்த்தி வழங்கினாா். அவரது வழியில் முதியோா் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், 5 லட்சம் முதியோருக்கு மாதம் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்காக 110 விதியின் கீழ் அறிவித்து, அதில் 4.5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கினோம். ஆனால், திமுக அரசு அவற்றை நிறுத்தி வருகிறது. அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் ஆதரவற்ற முதியோருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த இலவச முதியோா் இல்லத்தைக் கட்டியுள்ளாா்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அண்ணா கூறினாா். அதை எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் நிறைவேற்றிக் காட்டினா். அந்தத் தலைவா்கள் வழியில் வந்த அதிமுகவினா் ஏழைகளுக்கு உதவுகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, மாவட்டச் செயலாளா் இளங்கோவன், ஓமலூா் சட்டப்பேரவை உறுப்பினா் மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி சி.கிருஷ்ணன், வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com