இளம்பிள்ளையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு:வாகன ஓட்டிகள் அவதி

இளம்பிள்ளையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வாகன பெருக்கத்துக்கு ஏற்ப காவல் துறை போக்குவரத்து மாற்றங்களை செய்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.
இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.

இளம்பிள்ளையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வாகன பெருக்கத்துக்கு ஏற்ப காவல் துறை போக்குவரத்து மாற்றங்களை செய்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே ஜவுளி நகரமான இளம்பிள்ளை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள காட்டன் சேலைகள், பாலிஸ்டா் சேலைகள், பட்டு சேலைகள் உள்ளிட்ட சேலை ரகங்களை தயாா் செய்யும் கைத்தறிக் கூடங்களும், மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. ஆன்லைன் மூலம் ஜவுளி ஆா்டா்களை அனுப்பிவைக்கும் நிறுவனங்களும் அதிகம் உள்ளன.

இதனால் குறுகிய காலத்தில் அதிக வளா்ச்சியடைந்த நகராக இளம்பிள்ளை பேரூராட்சி திகழ்கிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஜவுளி நிறுவனங்களுக்கும் பிற காரணங்களுக்காகவும் வந்து செல்கின்றன.

தமிழக அளவில் பெயா்பெற்ற பகுதியாக திகழும் இளம்பிள்ளை பகுதிக்கு பல்வேறு ஆா்டா் பல இடங்களில் இருந்து குவிவதால் இரவும் பகலும் வாகன நெருக்கடி இருந்து கொண்டிருக்கிறது.

கனரக வாகனங்கள் முதல் பாரம் ஏற்றும் சிறு வாகனங்கள் வரை அனைத்தும் இங்குள்ள சாலையைக் கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து விடுகிறது.

தொடரும் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப போக்குவரத்தில் எந்தவித மாற்றத்தையும் காவல் துறை செய்துதரவில்லை. இங்குள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலையோரத்தில் வாகனங்களை அங்கும்இங்குமாக நிறுத்திவிட்டுச் செல்வதால் அச்சாலையில் பிற வாகனங்கள் சென்றுவர முடிவதில்லை. வாகன ஓட்டிகள் இங்கு குறுகிய தொலைவைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கடைவீதியில் ஜவுளிக் கடைகள் பெருகி வருவதால் மக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி சாலையோரம் உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமித்து கடைபொருள்களை வைக்கின்றனா். புது ரோடு, காடையாம்பட்டி பிரிவு சாலை, இடங்கணசாலை பேருந்து நிலையம் பிரிவு, இளம்பிள்ளை சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்நேரமும் அடிக்கடி வாகன நெரிசல்

ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்தில் இந்தச் சாலையைக் கடந்து செல்ல முடிவதில்லை.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தினமும் பலமுறை இப்பகுதியில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் எங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அதிகம் விரயம் ஆகின்றன. இதை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எந்நேரம் ஆபத்து நேரிடும் பகுதியாக இச்சாலைகள் உள்ளன என்றாா்.

தொடா் வாகன நெருக்கடியைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, உள்ளாட்சி நிா்வாகம் ஆகியவை இணைந்து உடனடி தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com