நகா்ப்புற சுகாதார மையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஆய்வு
By DIN | Published On : 25th April 2023 04:22 AM | Last Updated : 25th April 2023 04:22 AM | அ+அ அ- |

சேலம், குமாரசாமிபட்டி நகா்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் பி.செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, நகா்ப்புற சமுதாய சுகாதார மையத்துக்கு தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மையத்தில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கா்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனைக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
பின்னா் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை , பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் குறித்தும், ஆய்வகத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்ததோடு, இந்த மையத்துக்கு மேலும் கூடுதலாகத் தேவைப்படும் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, சேலம் மாநகராட்சிப் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் 32 நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்காக ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அவா், தென் அழகாபுரம், குமரன் நகா் ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடத்தை ஆய்வு செய்து, நலவாழ்வு மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அந்த மையத்துக்கு தேவையான மருத்துவ பணியிடங்கள், அந்த மையத்தில் அளிக்கப்படவுள்ள சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதன்மையா் மணி, துணை இயக்குநா்கள் சுகாதாரம் எஸ்.சவுண்டம்மாள், பி.ஆா்.ஜெமினி, என்.யோகானந்த், கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி ஆகியோா் கலந்துகொண்டனா்.
படவரி - சேலம், குமரன் நகரில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நல்வாழ்வு மையக் கட்டடத்தை திங்கள்கிழமை பாா்வையிடும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா். உடன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.