வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் பொருள்களை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தா தேவி பாா்வையிட்டாா்.

சேலம் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் வீதம் தோ்தல் இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி சேலம், கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் ரா. பிருந்தாதேவி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

தொகுதிகள் வாரியாக அனுப்பிவைப்பு:

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளுக்கு 716 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 358 கட்டுப்பாட்டுக் கருவிகள், 387 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 263 வாக்குச் சாவடிகளுக்கு 636 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 318 கட்டுப்பாட்டுக் கருவிகள், 344 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 241 வாக்குச் சாவடிகளுக்கு 580 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 290 கட்டுப்பாட்டுக் கருவிகள், 314 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓமலூா் தொகுதியில் 345 வாக்குச் சாவடிகளுக்கு 834 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 417 கட்டுப்பாட்டுக் கருவிகள், 451 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளுக்கு 722 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 361 கட்டுப்பாட்டுக் கருவிகள், 391 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி தொகுதியில் 321 வாக்குச் சாவடிகளுக்கு 776 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 388 கட்டுப்பாட்டுக் கருவிகள், 420 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,766 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 4,264 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,132 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,307 வாக்கு சரிபாா்க்கும் கருவிகள் மண்டல அலுவலா்கள் மூலம் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தோ்தல் பொருள்கள் அனுப்பிவைப்பு:

வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அழியா மை, பேனா, பென்சில், சீல் வைக்கத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட பொருட்களும் அவற்றுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்லும் மண்டல அலுவலா்கள், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குரிய பொருள்களை அதற்கான பொறுப்பு அலுவலா்களிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com