வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் அமைதியான முறையில் நடத்தப்படுவதைக் கண்காணித்து உறுதிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 130 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிக்குள் 82 பதற்றமான வாக்குச் சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 48 பதற்றமான வாக்குச் சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் மாவட்டத் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுதவிர, உள்ளூா் காவல் துறையினருடன், ஊா்க் காவல் படையினா், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com