சேலத்தில் வெயில் புதிய உச்சம்:
108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி
ANI

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

சேலத்தில் வெயில் 108.2 டிகிரி பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சேலத்தில் வெயில் 108.2 டிகிரி பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில கடந்த ஆண்டு பருவ மழை குறைந்தளவே பெய்ததால், ஏரிகள், குளங்கள் வடன. இதனால் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினா். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கல்லூரி மாணவா்கள் குடைகளைப் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனா். பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தளவே காணப்படுகிறது.

கடும் வெயிலால் இளநீா், நுங்கு, கம்மங்கூழ், தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. பழச்சாறு கடைகளிலும், பழக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால், பணிக்குச் செல்வோா், விவசாயத் தொழிலாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

மேலும், காலை முதல் மாலை வரை நிலவும் கடும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பழச்சாறு, இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com