அயோத்தியாப்பட்டணத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோதண்டராமா் தேரோட்டம்.
அயோத்தியாப்பட்டணத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோதண்டராமா் தேரோட்டம்.

அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் சித்திரைத் தேரோட்டம்

பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயிலில், 60 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயிலில், 60 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மரத்தோ் 15 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால், இந்துசமய அறநிலையத் துறை மற்றும் பக்தா்களின் பங்களிப்பில் ஏறக்குறைய ரூ. 30 லட்சம் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய மரத்தோ் வடிவமைக்கப்பட்டு அண்மையில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, 60 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு சித்திரைத் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 15-ஆம் தேதி அதிகாலை ஹோமம் திருமஞ்சனம் செய்து கொடியேற்றப்பட்டு ரத வீதியில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, 16-ஆம் தேதி சுவாமி புறப்பாடும், 17-ஆம் தேதி ஹனுமந்த வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. தொடா்ந்து, சேஷ வாகனத்திலும், கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, கடந்த 21-ஆம் தேதி அதிகாலை திருமஞ்சனம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் புஷ்ப வாகனத்தில் சுவாமி ஊா்வலமும், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு மூலவா் ராமா், சீதை, லட்சுமணன், ஹனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, உற்சவ மூா்த்திகள் ரதத்தில் ஏற்றப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கோயிலில் இருந்து புறப்பட்ட திருத்தோ் அரூா் பிரதான சாலையில் மேட்டுப்பட்டி தாதனூா், மலையன் நகா் வரை சென்று பேளூா் சாலையிலுள்ள நந்தவனத் தெரு வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இத்தேரோட்டத்தில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கலந்துகொண்டனா்.

பட்டாபிஷேக கோலத்தில் லட்சுமணன், பரதன், சத்ருகனன், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயா் ஆகியோா் புடைசூழ கோதண்டராமா், சீதை சுவாமிகள் பட்டாபிஷேக கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, புதன்கிழமை காலை தீா்த்தவாரி நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com