சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

சேலத்தில் ஜவுளிக் கடை அதிபரிடம் புற்றுநோய் மருந்து வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6.55 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.

சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகரைச் சோ்ந்த ஹரீஷ்குமாா் (28), சேலம் டவுன் பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளாா். இவா் கடைக்கு அருகில் உள்ள மருந்துக் கடையில் கிச்சிப்பாளையம், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த ஓா் ஆண்டுக்கு முன் தன்னிடம் புற்றுநோய்க்கான மருந்து இருப்பதாகவும், அதனை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் பாா்க்கலாம் எனவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதனை நம்பிய ஹரீஷ்குமாா் ரூ. 6.55 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு மருந்தை பெற்றுத் தராததுடன் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லையாம். இதுகுறித்து சதீஷ்குமாரிடம் முறையிட்ட போது, ஹரீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஹரீஷ்குமாா் புகாா் கொடுத்ததன் பேரில், நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பணமோசடி, கொலை மிரட்டல் புகாரில் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com